ஞாயிறு, மே 24, 2009

வயநாடு பயணம் - என் பார்வையில் - பகுதி - III

     மூன்றாம் பகுதி ஆரம்பிக்கும் முன்பாக நாம் சில படங்களை பார்ப்போம்.
ஊட்டி:
எடுக்கல் குகைகள்:
குருவா தீவு:
        மூன்றாவது பகுதி ஆரம்பிக்கும் போதே அனைவரும் பரபரப்பாகவும் சிலர் சுறுசுறுப்பாகவும் இருந்தனர். ஏனெனில் அது தான் அவர்களது கடைசி நாள் பயணம். காலையில் சுஜய் கொஞ்சம் தாமதமாக எழ மீனு அவரை ‘இன்னும் கிளம்பவில்லையா?’ என்று கேட்க, ‘நான் மட்டும் தான் கிளம்பவில்லையா?’ என்று சுஜய் எகிற, டென்ஷன் படம் பார்ப்பவர்களுக்கு ஏறுகிறது. பின்பு அது புஸ் ஆவது தனி கதை. 
     அனைவரும் எங்கு போகிறார்கள் என்று பர்த்தால் அது ‘வனவிலங்கு சரணாலயம்’. காலை 7 மணிக்கு அங்கு சென்று சேருகிறார்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு சரணாலயத்துக்கு சொந்தமான ஜீப்பில் ஏறி உள்ளே நுழைந்தனர். இவர்கள் வன விலங்குகளை பார்த்து பயப்படுவார்கள் என பார்த்தால், வன விலங்குகள் எல்லாம் இவர்களை பார்த்து பயந்துவிட்டது போலும். ஒரு சில மான், மயில் மற்றும் யானை மட்டுமே தைரியமாக வெளியே வந்தன. அவையும் இவர்களை பார்த்தவுடனேயே பயந்து சென்றன. இவையெல்லாம் நடந்தது முதல் பத்து நிமிடங்களில். பிறகு விலங்குகள் என்று எதுவும் தென்படவில்லை. அதனால் வெறுப்படைந்து தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து கொள்வது ‘கலைவாணர்’ காமெடி. மனிதனும் நாட்டில் வாழும் ஒரு மிருகம் தானடா என்று சொல்லாமல் சொல்கின்றனர். அடுத்து வெளியே வந்த பிறகு தங்களுக்கு பிடித்தமான உணவு வேட்டையில் இறங்குகின்றனர். இம்முறை அனைவரும் வெஜிடெரியன் மட்டுமே சாப்பிட்டு நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க்ன்றனர். 
       பின்பு விறுவிறுவென தாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தங்களது பெட்டியை மட்டும் எடுத்து கொண்டு கிளம்பினர். ஏனென்றால் படுக்கை வீட்டு சொந்தகாரர்களுடயது. இப்பொழுது வேன் சென்னையை நோக்கி புறப்பட்டது. இம்முறை ஊட்டி வழியாக வர தீர்மானித்தனர். கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஊட்டியில் எந்த இடத்தை பார்க்கப்போகிறோம் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் பைகாரா ஏரிக்கு செல்கின்றனர். அங்கு வானிலை குளிர்ச்சியாக இருக்க அனைவரும் மிகவும் அந்த இடத்தை ரசித்தனர். பின்பு வழக்கம் போல தங்களது கமிராவை எடுத்து படங்களை சுட்டு தள்ளினர். நேரம் ஆகவே வேகமாக கிளம்பி வேனுக்கு திரும்பி தங்களது சென்னை நோக்கிய பயணத்தை தொடர்ந்தனர். 
       மேட்டுபாளையத்தில் தங்களது இரவு உணவை முடித்துவிட்டு பார்த்தால் காலையில் சரியான நேரத்திற்கு சென்று சேர முடியாது என்பது போல தோன்றியது. ஆனால் டிரைவர் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் சேர்த்து வேகமாக வந்து கிளம்பிய இடத்திலேயே(ஆபீஸ்) வந்துவிடும் போது நேரம் சரியாக 8. அத்துடன் இவர்களது வயநாடு பயணமும் படமும் முடிகிறது. 
சிறப்பு ‘சிரிப்பு’ காட்சிகள்:
      பின் வரும் இரு காட்சிகளும் படத்தின் இரண்டாம் பகுதியில் குருவா தீவில் இடம் இடம்பெற்றன. 
முதல் காட்சி:
இடம்: பெட்டி கடை
இடம் பெறுபவர்கள்: செல்வா, பாலா, கனகு, ராஜேஷ், அர்ச்சனா, கடை ஓனர்.
     முதலில் கடை ஓனர் ஏதொ மலையாளத்தில் சொல்கிறார்.  அங்கிருக்கும் அனைவரும் கடந்த 6 மாதமாக மலையாளம் கற்றுக்கொண்டிருந்த அர்ச்சனாவை கேட்கின்றனர். அதற்கு அர்ச்சனா தரும் அதிரடியான, நகைச்சுவையான பதில் ‘அவங்க ஏதோ சொல்றாங்க’. பின்பு ’என்ன தான் இவ்ளோ நாளா கத்துக்கிட்டு இருந்த’ என கேட்டப் போது ‘குறச்சி குறச்சி மலையாளம் அறியும். பேரு எந்தா? அதெல்லாம் தெரியும்’ என தனது மலையாள மொழியாற்றலை செப்பினார்.
இரண்டாம் காட்சி:
இடம்: ஹோட்டல்
இடம் பெறுபவர்கள்: அனைவரும்
     சைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் ஒரு புறம் அமர்ந்திருக்க அசைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் மற்றோரு புறம் அமர்ந்திருந்தனர். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, முதலில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது ஹோட்டல் ஊழியர் வெங்கட் தட்டில் மீன் குழம்பை ஊற்றப் போனார். அதை விரும்பாத வெங்கட்டுக்கு ‘வேண்டாம்’ என்று மலையாளத்தில் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. சைகை கூட காட்ட தோன்றாமல் பக்கத்தில் இருக்கும் பைஜூ-விடம்(மலையாளம் தெரிந்த ஓரெ நபர்) ‘இப்ப வேணாம்-னு சொல்லுங்க பைஜூ’ என்று சொல்வது கடுப்பு காமெடி. ஆனால் பைஜூ-வே அதை சொல்ல தெரியாமல் தவிப்பது சிறப்பு காமெடி.
      மொத்தத்தில் இந்த பயண படம் மெதுவாக செல்லூம் போதிலும் சிரிக்க வைக்கவும், ரசிக்க வைக்கவும் தவறவில்லை.
                                                                                                               - பயணம் முடிந்தது.

Leia Mais…

ஞாயிறு, மே 17, 2009

வயநாடு பயணம் - என் பார்வையில் - பகுதி - II

நடிகர்கள: செல்வா, ராஜேஷ்,  பாலா,  பைஜு, அமித்,  அர்ச்சனா ராணி(இவர் படத்தில் ராணி என்று அழைக்கப் படுவார்), மீனு,  பாலாஜி,  கார்த்திக், 
அர்ச்சனா,  வெங்கட்,  கனகு,  சுஜய், லக்‌ஷ்மி,  டிரைவர்.
இயக்குநர்கள்: செல்வா, ராஜேஷ்.
விமர்சனம் தொடர்ச்சி:
 இரண்டாம் பாதி ஆரம்பிக்கும் போதே பார்வைக்கு மிக குளிர்ச்சியாக வயநாடு முழுக்க பனி படர்ந்து ஆரம்பிக்கிறது. ஏற்கனவே ஒரு நாள் பயணத்திலேயே கரைந்துவிட்டதால் சனிக்கிழமை அன்று நிறைய இடங்களை பார்க்க வேண்டும் என்று சீக்கிரமே கிளம்புகின்றனர். பல அலசல்களுக்கு பிறகு ஈடுக்கல் குகைகளை முதலில் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். கிளம்புவதற்கு முன்பு காலை உணவை ஒரு சிறிய டீ கடையில் கேரளத்தின் சிறப்பு உணவுகளான புட்டு மற்றும் கடலை கறியை எடுத்துக்கொண்டார்கள். மேலும் கேரளத்தின் சிறப்பு பானமான சாய்யா(அதாங்க டீ)வையும் அருந்தினார்கள். பின்பு குகைக்கு கிளம்பினார்கள் (வேட்டையாட எல்லாம் இல்ல... சும்மா பார்க்கத்தான்) .
    
குகை இருந்ததோ 1000 அடிக்கும் மேல்... பயணம் சென்றிருக்கும் அனைவருமே மென்பொருள் பொறியாளர்கள். ஆகவே மிகவும் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டு இருந்தனர். ஒரு காட்சியில் ராணி நடந்ததை காட்டும் போது அவர் மேலே குகைக்கு வருவாரா என்ற வினா எழுகிறது. ஆனால் எப்படியோ வந்து சேர்ந்து ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறார். இவ்வளவு தூரம் ஏறிப்போன பிறகு குகையில் இவர்கள் பார்ப்பதற்கு என உருப்படியாக ஒன்றும் இல்லை. ஆனாலும் விடாமல் தங்களது கேமராவால் படங்களை சுட்டு தள்ளிக்கொண்டிருந்தனர். ஷங்கரின் அடுத்த படம் ஒரு யூத் சப்ஜக்ட் என்று யாரோ சுஜயிடம் சொல்லி இருக்கிறார்கள். அதனால் அவர் தன்னிடம் இருந்த ஜெர்கினையும் சன் கிளாசசையும் முடிந்த அளவு பயன்படுத்தினார். ரோபோவுக்கு பிறகு தெரியும் ஹீரோ ஆகிறாரா இல்லையா என்று ஒரு இனிய ட்விஸ்டை இந்த படத்தில் வைக்கின்றனர். 
     குகைப் பயணத்தை முடித்துவிட்டு அடுத்து குருவா தீவிற்க்கு செல்கின்றனர். தீவை பார்க்க போகிறேன் என்று வெகுதூரம் நடந்து செல்கின்றனர். ஏற்கனவே மதியம் ஆகிப் போனதால், அங்கு ஒரு ஹோட்டலில் சென்று உண்கிறார்கள். செல்லும் போதே பல கடைகளில் லெமன் சோடா, மாங்காய், இளநீர் என சாப்பிட்டுக் கொண்டே சென்ற போதும் ஹோட்டலில் வெளுத்தனர். அதுவும் பல மீன்கள் பாலாஜி, பைஜு மற்றும் கனகு-வின் பசிக்கு இரையாகின. சாப்பிட்டு முடித்த பின் தீவில் இருந்த தண்ணீர் பகுதியில் நடக்க ஆரம்பித்தார்கள். அதை கடந்து சென்ற பிறகு தான் தெரிகிறது படத்தில் இருக்கும் திருப்பம். நாம் நினைத்ததை போல குருவா தீவு ஆரம்பிக்கவில்லை. அந்த தண்ணீரை கடந்த பிறகு தான் ஆரம்பிக்கிறது. அங்கு டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் தண்ணீரில் நடக்க வேண்டியிருந்ததால் பணத்தை எல்லாம் வேனிலேயே வைத்துவிட்டு சென்றனர். அவர்கள் அங்கு சென்ற போது மணி மாலை 4. 4.30 மணிக்கு பிறகு யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என சொல்லிவிட்டனர். ஆகவே அவர்களால் காசை எடுத்து வரவும் முடியவில்லை. பாலாவிடம் மட்டும் 90 ரூபாய் இருக்கிறது. ஆனால் ஒரு டிக்கெட் 10 ரூபாய் என மொத்தம் 140 ரூபாய் தேவை படுகிறது. கடைசியில் அவர்கள் ‘அரை ' டிக்கெட்டில் சென்றனர். பல ஆயிரங்கள் வேனில் இருக்கும் போது டிக்கெட் வாங்க காசு இல்லாமல் இவர்கள் படும் இந்த இன்னல் ‘வேதனை வேதனை’ என்று நம்மை அவர்களுக்காக பரிதாபப் பட வைக்கிறது. பின் அங்கு வரும் அவர்கள் நிறுவனத்தை சேர்ந்த இன்னொரு குழுவினரிடம் சமயோசிதமாக(!!!!!!) 200 ரூபாயை வெங்கட் வாங்குகிறான். அதைக் கொண்டு அவர்கள் மாலை குளித்து முடித்து வந்தவுடன் தேநீர் அருந்த பயன்படுத்துகின்றனர்.
     இரவு வீட்டிற்கு சென்ற பிறகு அனைவரும் சாப்பிட செல்கின்றனர், அதாவது விலங்குகள் வேட்டைக்கு செல்கின்றனர். சிலர் மட்டும் சைவம் சாப்பிட செல்ல மற்ற் அனைவரும்(நேற்று வேட்டையாடிய அதே கூட்டம்) அசைவ ஹோட்டலிற்கு சென்றனர். இம்முறை மாடு தப்பித்தது(மெனுவில் இல்லை). ஆனால் அதற்க்கெல்லாம் சேர்த்து கோழியும், மீனும் காலியானது. சுஜய் சிக்கன் தான் பிடிக்கும் என்று கோழியை அமித்துடன் சேர்ந்து ஒரு பிடிபிடிக்க, பைஜு-வும், பாலாஜியும் மீன் இனத்தை அழித்துக் கொண்டு இருந்தனர். பாலாஜி ஒவ்வொரு முறையும் ‘பைஜு மீன் நல்லா இருக்குல்ல’ என்று சொல்லும் போதும் அடுத்த மீன் ஆர்டர் செய்ய போகிறார் என்று அர்த்தம். ஆனால் கனகு இது எதை பற்றியும் கவலைபடாமல் ஆர்டர் செய்த அனைத்தையும் ‘சுவாஹா’ செய்து கொண்டிருந்தான். மற்றவர்களும் புகுந்து விளையாடினார்கள்.
    சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு நடந்து செல்லலாம் என்று முடிவு செய்கின்றனர். அதனால் டிரைவரிடம் சென்று நாங்கள் செல்கிறோம் நீங்கள் வேறு ஓட்டலுக்கு சென்றிருப்பவர்களை கூட்டி வாருங்கள் என்று சொல்கின்ற்னர். ஆனால் அவரோ 5 பேருக்கு எல்லாம் வேன் தேவையில்லை என வண்டியயை கோபமாக ஓட்டி செல்கிறார். பின்பு தான் தெரிகிறது ஓட்டலுக்கு செல்லும் போது எப்படியோ டிரைவரை விட்டு விட்டு சென்றது தெரிய வருகிறது. பின்பு ரூமுக்குசென்ற பிறகு சுஜய், பாலாஜி மற்றும் பைஜு சமாதான புறாக்களாக மாறி நிலைமையை சரி செய்கின்றனர்.
   இரவு உட்கார்ந்து சீட்டாட துவங்கும் இவர்கள், 1 மணி வரை ஆடிவிட்டு தூங்க செல்கின்றனர். அத்துடன் இரண்டாவது பகுதி நிறைவடுகிறது. 
                                                           - பயணம் அடுத்த பகுதியில் நிறைவடையும்.......

Leia Mais…

வியாழன், மே 07, 2009

வயநாடு பயணம் - என் பார்வையில் - பகுதி - I

நடிகர்கள: செல்வா, ராஜேஷ்,  பாலா,  பைஜு, அமித்,  அர்ச்சனா ராணி(இவர் படத்தில் ராணி என்று அழைக்கப் படுவார்), மீனு,  பாலாஜி,  கார்த்திக், 
அர்ச்சனா,  வெங்கட்,  கனகு,  சுஜய், லக்‌ஷ்மி,  டிரைவர்.
இயக்குநர்கள்: செல்வா, ராஜேஷ்.
விமர்சனம்:
       “என் இனிய தமிழ் மக்களே, நாம் இப்போது செல்லவிருப்பட்து கேரளாவில் இருக்கும் வயநாட்டிற்கு.... அங்கு இவர்களின் மூன்று நாள் அணுபவங்களே இந்த கதையில்லா படத்தின் காட்சிகள்” என்று பாரதிராஜாவின் சாயலில் இப்ப்டத்தின் இயக்குநர்கள் ஆரம்பிக்கவில்லை... ஏனெனில் இவர்கள் பாரதிராஜா இல்லை.
.

   

   படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே தெரிந்து விடுகிறது... அவர்கள் செல்லும் வேனைப் போலவே இந்த படமும் பொறுமையாக தான் போகும் என்று... படத்தின் முதல் பாதி முழுக்க வேனில் நகர்வது அனைவருக்குமே சலிப்பை உண்டக்கிறது... அவ்வப்போது தேவையில்லாமல் வேனை நிறுத்தி பயணம் செய்பவர்களின் கடுப்புகளுக்கு ஆளாகி வில்லன் பாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்துகிரார் டிரைவர். முதல் நால் இரவில் ஆரம்பிக்கும் இவர்களது வயநாடு பயணம் அடுத்த நாள் இரவு வரை தொடர்கிறது. பயணத்தின் போது யாரும் அதிகமாக பேசிக்கொள்ளாமல் டி.வி யையே பார்த்துக் கொண்டிருப்பது கலகலப்பை குறைத்து விடுகிறது.

    அமைதியாக சென்று கொண்டிருக்கும் பயணத்தின் நடுவே ஒரு ‘திடுக்’ சம்பவம் நடக்கிறது. பயண்ம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் சாயாங்காலமாக ஒரு நல்ல இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்தில் வேனை நிறுத்தி போட்டோ எடுக்க செல்கிறார்கள். தண்ணீர் நிறைந்து இருக்கும் அந்த இடத்தில் பாலாஜியும் வெங்ட்-உம் குளிக்க இறங்குகிறார்கள். அப்பொழுது வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சுஜய் தண்ணீரில் வழுக்கி விழ, அவரை காப்பாற்ற நீச்சல் தெரியாமல் ராஜேஷ் உள்ளே இறங்க அவரும் உள்ளே விழுகிறார். இவர்களை காப்பாற்ற மீனு தன்னுடைய துப்பட்டாவை தர அதை பிடித்து மேலே வருவார்கள் என்று பார்த்தால் துப்பட்டாவை இழுத்து கொண்டு உள்ளேப் போய் மேலும் திகில் கிளப்பினார்கள். பின்பு பாலாஜி வந்து இருவரையும் தூக்கிவிட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்து ஹீரோவாகிறார்.

   அதுவரை பெரிய விஷயமாக பேசப்பட்ட கனகுவின் தூக்கம் இதன் மூலம் பின்னூக்கு தள்ளப்பட்டது. முதல் நாள் இரவு அனைவரும் விழித்து கொண்டிருக்க கனகு மட்டும் அடுத்த நாள் காலை வரை ஒரு வினாடி கூட விழிக்காமல் தூங்கியது பலருக்கும் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தியது. அதுவும் அவன் பக்கத்தில் இருந்த வெங்கட் ‘பஞ்சதந்ததிர’ படத்தை பார்த்துக் கொண்டு சிரிக்கிறேன் என்று சொல்லி சீட்டில் இருந்து எகிறி குதித்துக் கொண்டு இடி முழக்கத்தை ஏற்படுத்தி எதிர் செல்லூம் வண்டியில் உள்ளவர்களின் தூக்கத்தயும் கெடுத்துக் கொண்டிருந்தான்.

     என்ன தான் நீண்ண்ண்ண்ண்ண்டடடடட பயணம் என்றாலும் இயற்கை வடிவமைப்பாளர் கடவுளும், கட்டிட வடிவமைப்பாளர் கொத்தனாரும் சாலை ஓரங்களில் அழகிய ஆச்சர்யங்களை படைத்து நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றனர்.  

   பயணம் செய்த அன்று மதியம் ஒரு அசைவ ஓட்டலில் புகுந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அனைத்து உயிரினங்களின் வயிற்றிலும் புளியை கரைக்கிறார்கள் இப்படத்தில் நடித்தவர்கள். ஆளுக்கு ஒரு உணவு என்று வாங்காமல் மெனு கார்டில் இருக்கும் ஒவ்வொரு விலங்கிலும் ஒரு உணவு என பீதியை கிளப்பினார்கள். மெனு கார்டில் இல்லாத ஓரே காரணத்தால் முயல், காடை, கவுதாரி எல்லாம் தப்பித்தன. இரவு வயநாடு போய் சேர்ந்ததும் கேரள ஸ்பெஷல் ஆப்பம் – கடலை கறியை அனைவரும் உண்டார்கள். இடையில் சில பல ஆம்பலேட்கள் உள்ளே சென்றது.

    கடைசியில் அனைவரும் வந்து வீட்டில் ஓய்வெடுக்க தஞ்சமடைய முதல் பகுதி நிறைவடைந்தது.....

-       பயணம் தொடரும்...... 

Leia Mais…